உழைக்கும்வர்க்கத்தின் பணத்தை சூறையாடும் திருடர்கள்

உழைக்கும் வர்க்கத்தின் பணத்தை சூறையாடும் முறிகள் திருடர்கள்

by Staff Writer 01-08-2018 | 9:07 PM
Colombo (News 1st)  சொந்த வாகனமொன்றை வாங்க வேண்டும் என்ற கனவு படிப்படியாக பொதுமக்களிடமிருந்து அற்றுப்போகின்றது. நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் பொருட்களின் விலை, தொடர்ச்சியாக வீழ்ச்சி காணும் ரூபாவின் பெறுமதி, சுமார் மூன்று வீதத்தால் வட்டி வீதம் அதிகரிப்பு என அனைத்திற்கும் திருடர்கள் மக்களின் பணத்தை சூறையாடியமை காரணமல்லவா? 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது முறிகள் மோசடியின் போது 869 மில்லியன் ரூபாவிற்கும் மேல் நட்டம் ஏற்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். 30 வருடங்கள் நிறைவில் இந்த நட்டம் பில்லியன், ட்ரில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்பதும் தற்போது நிரூபணமாகியுள்ளது. பல வருடங்களாக வியர்வையை ஆகூதியாக்கி சம்பாதித்து, மாதாந்த சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்பீடு செய்யும் உழைக்கும் வர்க்கத்தின் பணத்தையும் முறிகள் திருடர்கள் சூறையாடுகின்றமை மிகவும் அபாயகரமான நிலையாகும். ஓய்வுபெறும் தினத்தில் எஞ்சியிருக்கும் பணமும் கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலையில், கையில் இருக்கும் பணத்திற்கும் வரி விதிக்கும் அளவிற்கு முறிகள் கொள்ளை வலுவடைந்துள்ளது. முதலாவது முறிகள் மோசடியின் நட்டம் மாத்திரமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றுமொரு ஊழல் மிக்க கொடுக்கல் வாங்கலினால் முதலாவது மோசடியை விட பல மடங்கு அதிகமான நட்டம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பிலான தகவல்களை விரைவில் நியூஸ்ஃபெஸ்ட் வௌியிடும்.