பொதுநலவாய அமைப்பின் செயலாளர் இலங்கை வருகை

இலங்கைக்கு வருகை தரவுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்

by Staff Writer 01-08-2018 | 7:35 AM
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் (Patricia Scotland), 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு வரும் முதலாவது சந்தரப்பம் இதுவென வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (01) நாட்டுக்கு வருகை தரவுள்ள பெட்ரீசியா ஸ்கொட்லன்ட், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் வர்த்தக செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மேலும், 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளை செயற்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.