இந்தியாவில் 50வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது

இந்தியாவில் 50 வீத நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது

by Bella Dalima 01-08-2018 | 4:17 PM
இந்தியா முழுவதும் 50 சதவிகித நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டதாக மத்திய அரசாங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வௌியிட்டுள்ளது. இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதால் இந்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரில் ப்ளூரைட், இரும்பு, இரசாயனங்கள் போன்றவற்றின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடிநீரில் நைட்ரேட் கலந்தால் இரத்தத்தின் திறனில் குறைவு ஏற்படும், ஆர்சனிக் கலந்திருந்தால் தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, சிறுநீரக மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என மத்திய அரசு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாக ப்ளூரைட், நைட்ரேட்கள் போன்ற இரசாயனங்கள் கலந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் 386 மாவட்டங்களில் நைட்ரேட், 335 மாவட்டங்களில் ப்ளூரைட், 301 மாவட்டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் இரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம் ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகக் கலந்துள்ளதாகவும் சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரசாயனங்கள் கலந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.