மக்கள் வங்கி கொடுக்கல் வாங்கலில் குளறுபடி

பணிப்பாளர் சபை உறுப்பினருக்கு 10 பில்லியன் ரூபா கடன் கொடுத்த மக்கள் வங்கி

by Staff Writer 31-07-2018 | 7:37 PM
Colombo (News 1st)  10 பில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், மக்கள் வங்கியிடம் வினவியுள்ளது. மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு, 10 பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. மக்கள் வங்கியின் பணிப்பாளர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 10 பில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக தேஷய பத்திரிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வௌியிட்டிருந்தது. வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஜெகான் அமரதுங்க, நிறைவேற்று உப தலைவராக பதவி வகிக்கும் எம்.டி.டீ.வோகர்ஸ் நிறுவனத்திற்கு வங்கியின் கடன் குழு அனுமதியுடன் குறித்த கடன் தொகை வழங்கப்பட்டுள்ளமை நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்த போது உறுதி செய்யப்பட்டது. இந்த விடயத்தை தௌிவுபடுத்தும் வகையில், மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று பிற்பகல் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். எம்.டி.டீ.வோகர்ஸ் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் மக்கள் வங்கியுடன் நம்பகத்தன்மையுடன் கொடுக்கல் வாங்கல் செய்துள்ளதாகவும், அவ்வப்போது நிதி வசதிகளைப் பெற்று உரிய முறையில் மீளச்செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கும் போது பின்பற்ற வேண்டிய இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி குறித்த நிறுவனத்திற்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வங்கியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மூவர் மற்றும் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய பணிப்பாளர் சபை கடன் குழுவின் பரிந்துரையின் பேரில், பணிப்பாளர் சபை வழங்கிய அனுமதியுடன் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய வங்கி விதித்துள்ள அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டமை உறுதி செய்யப்பட்டதன் பின்னரே பணிப்பாளர் சபை அனுமதியை வழங்கியதாகவும் மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ கூறியுள்ளார். கடன் வழங்கும் போது உரிய நடைமுறையை தவிர வேறு எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் பரிந்துரைகளையோ அழுத்தத்தையோ மத்திய வங்கி கவனத்திற்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி எம்.டி.டீ.வோகர்ஸ் நிறுவனம் பெற்றுக்கொண்ட ஒரு பில்லியன் ரூபா கடன், செயற்பாடற்ற கடன் தொகையாக மாற்றப்பட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் ருசிரிபால தென்னக்கோன் தெரிவித்தார். மக்கள் வங்கி 500 மில்லியன் ரூபாவை எம்.டி.டீ.வோகர்ஸ் நிறுவனத்தில் 9.75 வீத வட்டியில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது மிகவும் குறைந்த வட்டி வீதம் எனவும் அரச வங்கியொன்று இத்தகைய குறைந்த வட்டி வீதத்தில் முதலீடு செய்தமை சந்தேகத்திற்குரியது எனவும் ருசிரிபால தென்னகோன் தெரிவித்தார். 2015 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியாகும் போது எம்.டி.டீ.வோகர்ஸ் நிறுவனத்தின் நான்காவது மிகப்பெரிய பங்குதாரராக மக்கள் வங்கி அமைந்திருந்தது. பிரதமருக்கு நெருக்கமான நிரஞ்சன் தேவாதித்ய இந்த நிறுவனத்தின் சுயாதீன நிறைவேற்றுத் தரமற்ற பணிப்பாளராக பதவி வகிக்கின்றார். மாமனார் மத்திய வங்கியில் இருந்து கொண்டு, மருமகனுக்கு சாதகமான வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் பில்லியன் கணக்கான பணத்தை இழக்கச்செய்தமை தற்போது நிரூபணமாகியுள்ளது. அரச வங்கியின் பணிப்பாளராக இருந்துகொண்டு தாம் சேவையாற்றிய நிறுவனத்திற்கு கடனை அனுமதித்தமை ஆர்வம் சார்ந்த முரண்பாடாக அமையும் அல்லவா? 10 பில்லியன் ரூபா எனும் மிகப்பெரிய கடன் தொகையை வழங்கும் போது வங்கிக்குள்ள பாதுகாப்பு என்ன? மக்களின் பணத்தைக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் விழிப்புடன் அவதானித்து வருகிறது.