வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்து அரசு கவனம்

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 31-07-2018 | 7:26 AM
Colombo (News 1st) பின்னடைவைச் சந்தித்துள்ள மக்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்பி, ஏனைய மாகாணங்களைப் போன்று வடக்கு, கிழக்கிற்கும் அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி நியமித்துள்ள விசேட ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி தலைமையில் நேற்று (30) பிற்பகல் கூடியது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக ஜனாதிபதியினால் இந்த செயலணி நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த செயலணியின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.