உப்பளம் அமைந்துள்ள காணிகளை கையகப்படுத்த முயற்சி

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்: உப்பளம் அமைந்துள்ள காணிகளை கையகப்படுத்த முயற்சி

by Bella Dalima 31-07-2018 | 8:51 PM
Colombo (News 1st)  தமது உப்பளம் அமைந்துள்ள பூர்வீகக் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1950 ஆம் ஆண்டில் இருந்து தமது பரம்பரையினர் புத்தளம் - மன்னார் வீதியில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கத்தினர் தெரிவித்தனர். அன்றிலிருந்து தமது உற்பத்தியை உப்புக்கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்ததாகவும், 1989 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அனுமதியுடன் தமது உற்பத்தியை தனியாருக்கு விற்பனை செய்ய முடிந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 400 ஏக்கர் உப்பு கால்வாயின் ஊடாக இங்கு உப்பு உற்பத்தி செய்யப்படுவதுடன், 390 பேர் தமது சங்கத்தில் உறுப்புரிமை பெற்றுள்ளதாக புத்தளம் உப்பு உற்பத்தியாளர்கள் நலன்புரி சங்கம் தெரிவித்தது. தமது சொந்தக் காணியிலேயே உப்பு உற்பத்தியில் தாம் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த நிலையில், இந்த உப்பளங்களை அரசுடைமையாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர். எனினும், இது குறித்து தாம் முறையாக அறிந்திருக்கவில்லை எனவும் 45 வருடங்களின் பின்னர் தமது காணியை தற்போது அரசாங்கம் கோருவதாகவும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். மன்னார் - கொழும்பு வீதியூடாக புத்தளம் மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், மாவட்ட செயலகத்தில் மகஜரொன்றையும் கையளித்தனர்.