பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மகாவலி கங்கை

பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மகாவலி கங்கை

by Staff Writer 31-07-2018 | 8:55 PM
Colombo (News 1st)  கண்டி - கொஹாகொட குப்பைமேடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள் காரணமாக மகாவலி கங்கை பாரிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. கொஹாகொட குப்பைமேட்டில் இருந்து மகாவலி கங்கைக்கு 50 மீற்றரை விடவும் குறைவான தூரமே காணப்படுகின்றது. மூன்று தசாப்த காலங்களாகக் கொட்டப்பட்ட குப்பைகள் தற்போது சுமார் 200 மீற்றர் உயரத்திற்கு குவிக்கப்பட்டுள்ளன. கண்டி மாநகர சபையின் மலக்கழிவுகளும் குப்பைமேட்டிற்கு அருகிலேயே அகற்றப்படுகின்றன. இவ்வாறு மலக்கழிவுகள் அகற்றப்படும் பகுதிக்கு அருகில் இருந்தே கண்டி விசல் நீர்த்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கொஹாகொட குப்பைமேடு அமைந்துள்ளது. துறைசார் ஆய்வுகளின் போது இவ்வாறான சம்பவங்கள் நேரடியாக தமக்கு பதிவாகவில்லை எனவும் அவ்வாறான சம்பவமொன்றைக் கண்காணித்தால் அல்லது முறைப்பாடு முன்வைக்கப்பட்டால், கண்டி நகர சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதனை சீர்செய்ய முயற்சி மேற்கொள்வோம் என பொல்கல்ல மகாவலி அணைக்கு பொறுப்பான பொறியியலாளர் அதுல புஷ்பகுமார குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த கழிவகற்றல் வடிகாண் மற்றும் கொஹாகொட குப்பைமேட்டிற்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடின், குறுகிய காலத்திற்குள் பாரிய சூழல் மாசு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.