வியட்நாம் வாகன விபத்தில் மணமகன் உட்பட 13 பேர் பலி

வியட்நாம் வாகன விபத்தில் மணமகன் உட்பட 13 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 30-07-2018 | 11:28 AM
வியட்நாமில் மினிபஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. திருமண வைபவம் ஒன்றிற்காக விருந்தினர்களை ஏற்றிச்சென்ற குறித்த மினிபஸ் கண்டெய்னர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மணமகன் உட்பட அவரது குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருமணத்திற்காக, குவாங் ட்ரி (Quang Tri) மாகாணத்திலிருந்து மணமகன் மற்றும் குடும்பத்தினர், டின்ஹ் மாகாணத்திலுள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டெய்னரின் சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதிப் போக்குவரத்து சீரற்ற நிலையில் இருக்கும் வியட்நாமில், வீதி விபத்துகள் இடம்பெறுவது பொதுவானதொன்று. இந்தநிலையில், கடந்த வருடம் வீதி விபத்துகளில் சிக்கி 8,200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.