பகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை

முன்னறிவித்தலின்றி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை

by Staff Writer 29-07-2018 | 6:36 AM
Colombo (News 1st) முன்னறிவித்தல் இன்றி பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நாளை (30) தொழிற்சங்கங்களின் கருத்துக்களை கேட்டறியவுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றபோதிலும், பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டமை கவலையளிப்பதாக எஸ்.எம். அபேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார். கட்டுப்பாட்டாளர்கள், ரயில் காப்பாளர்கள், சாரதிகள் மற்றும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் கடந்த 26 ஆம் திகதி திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். மருதானை பகுதியிலுள்ள ரயில்வே திணைக்களத்திற்கு உரித்தான காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. முன்னறிவித்தலின்றி பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். இதனால் கோட்டை ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.