சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு பணியாற்றவுள்ளேன்

சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு பணியாற்றவிருப்பதாக இம்ரான் கான் தெரிவிப்பு

by Bella Dalima 27-07-2018 | 6:18 PM
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் நிலையில் உள்ள இம்ரான் கான், சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு மக்கள் சேவையில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 4 மாகாண சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேற்று (26) தேர்தல் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வரையில், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முன்னிலையில் உள்ளது. இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி மூலம் இம்ரான் கான் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், தனது வெற்றி குறித்து பேசிய இம்ரான் கான், வாக்களித்த பாகிஸ்தான் மக்களுக்கும், தனது 22 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு வெற்றியைக் கொடுத்த இறைவனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சேர தாம் பார்த்துள்ளதாகவும், ஆனால் தற்போது பாகிஸ்தான் முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் மக்கள் நல அரசை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொழில் செய்வதற்கு உகந்த நாடாக பாகிஸ்தானை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சீனா தனது 70 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானை முன்னேற்றுவதில் சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.