கடலட்டை பிடிப்பதற்கான பயிற்சிகளை வழங்கத் தயார்

கடலட்டை பிடிப்பதற்கான பயிற்சிகளை வழங்கத் தயார் என வட மாகாண கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு

by Staff Writer 27-07-2018 | 7:34 PM
Colombo (News 1st)  கடலட்டை பிடிப்பதற்கு வட பகுதி இளைஞர்கள் முன்வருவார்களாயின், அதற்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட மாகாண மீன்பிடி அமைச்சர் தெரிவித்தார். இலங்கையின் வட கடற்பகுதிகளில் கடலட்டை பெருக்கம் அதிகளவில் காணப்படுகின்றது. வட பகுதி கடற்சூழல் கடலட்டை பெருக்கத்திற்கு ஏற்புடையதாகக் காணப்படுவதாக புவியல் துறைசார் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னார், பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா, முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கடற்பகுதிகளில் அதிகளவில் கடலட்டை பெருக்கம் காணப்படுகின்றது. கடலட்டைகளுக்கு உள்நாட்டு நுகர்வு இன்மையால், முற்றுமுழுதாக ஏற்றுமதிசார் இலாபமீட்டு தொழிலாகக் காணப்படுகின்றது. சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்வான், கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கடலட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வட கடற்பகுதிகளான முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் பிற மாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பெருந்தொகை இலாபம் ஈட்டுகின்ற கடலட்டை பிடிக்கும் செயற்பாட்டில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதற்கு வட பகுதி மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்குமாறு கோரி யாழப்பாணம் மற்றும் முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களங்களை முற்றுகையிட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடலட்டை பிடிக்கப்படுவது தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போதும் அவதானம் செலுத்தப்பட்டது. கடலட்டை பிடிப்பதற்குரிய தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினால், தாமும் கடலட்டை தொழிலை மேற்கொள்ளத் தயார் என வட பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்தியாவில் கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 ஜுலை 11 ஆம் திகதி தடை விதித்தது. இதன் காரணமாக சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகளைக் கடத்தி, இங்கிருந்து தெற்காசிய நாடுகளுக்கு கடலட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எனினும், இவ்வாறு இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கடலட்டை கடத்தப்பட்டுகின்ற போது, இரு நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 21 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட சுமார் 750 கிலோகிராம் கடலட்டை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இலங்கைக்கு கடத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை கடந்த 13 ஆம் திகதி தனுஸ்கோடி கடல் பாதுகாப்பு பொலிஸார் மீட்டனர். 300 கிலோ எடை கொண்ட சுமார் 60 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான கடலட்டைகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.