மட்டக்களப்பு - கரடியனாறில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு - கரடியனாறில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பலி

by Staff Writer 26-07-2018 | 7:47 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கரடியனாறு, வந்தாறுமூலைப் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (25) காலை 7 மணியளவில், வந்தாறுமூலை - பாலமடு தெற்குப் பகுதியிலுள்ள தமது கால்நடைப் பண்ணைக்கு சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தநிலையில், குறித்த பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகளவில் காணப்படுவதாகவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதுவரையில் எமது பகுதியில் இரண்டு, மூன்று பேர் யானையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக அரசாங்கத்தினால் மக்களுக்கு நன்மையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. யானை வேலி போடவில்லை. காலம் முழுக்க யானையோடு போராடி தொழில் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். உப்போடையிலிருந்து மயிலவெட்டுவான், பாலமடு போகும் வழியில் யானைத் தொல்லை அதிகமா இருக்கு. யானைக்கு நோய் ஏற்பட்டால் உடனே வந்து பாக்கிறாங்க. ஆனால், மனுசனை யானை அடிச்சுப் போட்டுக்கிடந்தா கவனிக்கிறாங்க இல்ல. போற வழியில காடு எல்லாம் அகற்றி, நல்ல பாதையை அபிவிருத்தி செய்ய சிந்திக்குறாங்க இல்ல என குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.