செவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு

செவ்வாயில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு: மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பு

by Bella Dalima 26-07-2018 | 4:19 PM
செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக மிகப்பெரிய ஏரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மார்சிஸ் என்ற ராடார் கருவி மூலம் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது. இதுவரை செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீர் ஆதாரங்களில் இதுதான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாயின் துருவப் பனி முகடுகளுள்ள கிழக்குப் பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவிற்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும், கிரகத்தில் நிலவும் காலநிலை காரணமாக நீரின் பெரும்பகுதி பனிக்கட்டியாக உறைந்து காணப்படுகிறது. ஏரி நீரின் ஆழம் சுமார் ஒரு மீட்டர் வரை இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.