வௌிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் திரும்புவதில்லை

உயர்கல்விக்காக வௌிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் நாடு திரும்புவதில்லை

by Staff Writer 26-07-2018 | 7:17 AM
Colombo (News 1st) உயர்கல்விக்காக வௌிநாடுகளிற்கு செல்லும் விரிவுரையாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அரச விரிவுரையாளர் ஒருவரின் பட்டப்படிப்பிற்காக 60 இலட்சம் ரூபா வரை, அரசாங்கத்தினால் செலவிடப்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக பயிற்சிக் காலத்தின்போது, அவர்களுக்கான சம்பள கொடுப்பனவுகள்  வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். உயர்கல்விக்காக வௌிநாடு செல்லும் விரிவுரையாளர்கள் மீண்டும் நாடு திரும்பாதமையால், அரசாங்கத்திற்கு வருடமொன்றிற்கு மட்டும் பல கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி குறித்த விரிவுரையாளர் களிற்காக அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட நிதியை அவர்களிடமே மீண்டும் அறவிடுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜே.ஜே. ரத்னசிறி மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி, பிணையாளர்களிடமும் குறித்த பணத்தை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.