பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்

எழுத்தாளர் Bella Dalima

26 Jul, 2018 | 3:58 pm

Colombo (News 1st)  பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரிக் இன்சாப் கட்சி 119 இடங்களிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சியான முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும் பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று (25) நடைபெற்றது. நாடு முழுவதும் 85,000 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்தனர்.

இத்தேர்தலில் நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இம்ரான் கானின் தெஹ்ரீக் இ- இன்சாப் கட்சி முன்னிலையில் இருந்து வந்தது.

மொத்தமுள்ள 272 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. இதனையடுத்து மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாகூரில் 1952 ஆம் ஆண்டு பிறந்த இம்ரான் கான், 1971 இல் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். 1971 முதல் 1992 வரை 21 ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

இம்ரான் கான் 1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் லாகூரில் புற்றுநோய் மையத்தை தொடங்கினார். மேலும் பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இம்ரான் கான் செயற்பட்டார்.

ஓய்விற்குப் பிறகு இம்ரான் கான் கிரிக்கெட் வர்ணணையாளராகவும் சில ஆண்டுகள் செயற்பட்டார்.

1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கான் கட்சி ஒரு இடத்தைப் பிடித்தது. 2008 தேர்தலை புறக்கணித்த இம்ரான் கட்சி, 2013 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. 2013 தேர்தலில் 7.5 மில்லியன் வாக்குகள் பெற்று 2 ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

கட்சி தொடங்கி 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கிறார் இம்ரான் கான்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்