ஒலுவில் துறைமுக வாயிலைத் திறக்குமாறு ஆர்ப்பாட்டம்

ஒலுவில் துறைமுக வாயிலைத் திறக்குமாறு கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 26-07-2018 | 8:07 AM
Colombo (News 1st) ஒலுவில் துறைமுகத்தின் வட பகுதியிலுள்ள வாயிலைத் திறக்குமாறு கோரி, ஒலுவில் பகுதி மீனவர்கள் நேற்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒலுவில் துறைமுக நுழைவாயில் முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, துறைமுகத்தின் வடக்குப் புற வாயில் திறக்கப்படாமையினால், தாம் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஒலுவில் மீனவர்கள் தெரிவித்தனர்.
ஒலுவில் ஹாபர் ரோட்ட மூடி வைச்சிருக்கிறதால் எங்களுக்கு அந்தப் பக்கம் போக முடியாதுள்ளது. மண்ணெண்ணெய் வாங்க முடியாது. எங்கட போட்களை (Boat) கட்டிவைக்க முடியாது. அடுத்த பக்கம் போக ஆட்டோவிற்கு 1,000 ரூபா செலவாகுது. இப்பிடி கிட்டத்தில் பாதையை வச்சிக்கொண்டு தூரம் போகவேண்யிருக்கு. தயவுசெய்து இந்தப் பாதையை திறக்க வேணும் என மீனவர் ஒருவர் தெரிவித்தார். ஒலுவில் மக்களுடைய காணிகளை சுவீகரித்து ஒலுவில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு தான் இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயிலைத் திறக்க சொல்லி நாங்கள் எத்தனை ஆர்ரப்பாட்டம் செய்தும் இதுவரையில் எதுவும் நடைபெறவில்லை என மற்றொரு மீனவர் கூறினார்.
மீனவர்களின் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒலுவில் துறைமுகத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை எனவும் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்து, வடக்கு வாயில் பகுதியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதும் அதனைத் திறந்து மீனவர்களின் பாவனைக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.