A9 வீதியில் விபத்து: 18 பேர் காயம்

A9 வீதியில் விபத்து: 18 பேர் காயம்

by Staff Writer 25-07-2018 | 4:32 PM
Colombo (News 1st)  A9 வீதியில் பூனாவ கடற்படை முகாமிற்கு அருகில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்தவர்களில் 5 பெண்கள் அடங்குகின்றனர். சாரதி தூக்கக்கலக்கத்தில் வாகனத்தை செலுத்தியதால், வாகனம் பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதனிடையே, மேலும் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சூரியவெவ, கொடிகாமம், அக்குரஸ்ஸ, முந்தல் மற்றும் கலேவெல பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன. சூரியவெவ 18 ஆம் காலனி பகுதியில் இன்று அதிகாலை கெப் வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ​மோதி விபத்திற்குள்ளானதில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஏ 9 வீதியில் எழுதுமட்டுவாழ் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதி விபத்திற்குள்ளானதில் 19 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். பேலியகொட - புத்தளம் வீதியில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான லொறியொன்று மற்றொரு லொறியுடன் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்ததுடன், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை, கலேவெல - பெலிகமுவ பகுதியில் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய செய்திகள்