மருதங்கேணியில் எவரும் கைது செய்யப்படவில்லை: பொலிஸ்

மருதங்கேணியில் எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸார் தெரிவிப்பு

by Staff Writer 25-07-2018 | 7:47 PM
Colombo (News 1st)  யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வாள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. மருதங்கேணியில் வாள்களுடன் 13 இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (24) கைது செய்துள்ளதாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்த வாள்கள், கம்பிகளையும் அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எழுதுமட்டுவாளில் தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 இளைஞர்களை பளை பொலிஸார் கைது செய்துள்ளதாக இன்றைய மெட்ரோ நியூஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை "ஐ" குழு எனவும் ''ஆவா'' குழு எனவும் அடையாளப்படுத்திக்கொண்டு வாள்வெட்டு சம்பங்களில் ஈடுபட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில் இருந்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தச்சென்றதாகத் தெரிவித்து கொடிகாமம் பொலிஸார் வாகனமொன்றை பின்தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பளை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலொன்றுக்கு அவர்கள் செல்வதாக தகவல் கிடைத்ததென கொடிகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த தகவலுக்கமைய, வாகனத்தை பொலிஸார் பின்தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் இல்லையென்பதால், அவர்களை பொலிஸார் விடுவித்ததாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் பெர்னாண்டோ நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார். கொடிகாமம் பகுதியில் குழு மோதலுக்கு தயாரான நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. வீடொன்றிற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ​மோட்டார் சைக்கிளொன்றை உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.