சென்னையில் மின்சார ரயிலிலிருந்து வீழ்ந்த ஐவர் உயிரிழப்பு

சென்னையில் மின்சார ரயிலிலிருந்து வீழ்ந்த ஐவர் உயிரிழப்பு

சென்னையில் மின்சார ரயிலிலிருந்து வீழ்ந்த ஐவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Jul, 2018 | 3:59 pm

சென்னையில் மின்சார ரயிலின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி வீழ்ந்து ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (23) இரவு பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை அதே இடத்தில், அதே சுவரில் மோதி 5 பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில்கள், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்துள்ளனர். இந்த பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. இதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.

மின்சார ரயிலை எதிர்பார்த்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால், பயணிகள் அனைவரும் கிடைத்த ரயில்களில் முண்டியடித்தபடி ஏறிச்சென்றனர்.

இதன் காரணத்தால் பயணிகள் தடுப்புச்சுவரில் மோத நேர்ந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணி ஒருவரின் பை தடுப்பு சுவரில் மாட்டிக்கொண்டதாகவும் அவர் நிலை தடுமாறி வீழ்ந்த போது, அவரோடு 8 பயணிகள் அடுத்தடுத்து வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்துள்ளார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 6 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 7 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்