வலப்பனை முன்னாள் தவிசாளர் ஜகத்துக்கு 12 வருட சிறை

வலப்பனை முன்னாள் தவிசாளர் ஜகத்துக்கு 12 வருட சிறை !

by Staff Writer 23-07-2018 | 4:04 PM

வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலப்பனைத் தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலலால் பெர்னான்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல்நீதிமன்றம் 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொதுச்சொத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த மேல்நீதிமன்ற நீதிபதி எஸ்.யூ.பீ. கரலியத்த, 105 இலட்சம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 4 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். கைத்துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 7,500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டார். 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் உடபுஸ்ஸல்லாவை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட ருவன் குணசேகர உள்ளிட்டவர்களினால் குறித்த நபர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.