குற்றச்சாட்டுக்கள் போலியானவை - ஜொனீ கருத்து!

குற்றச்சாட்டுக்கள் போலியானவை - ஜொனீ கருத்து!

by Staff Writer 23-07-2018 | 5:31 PM

நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்தமையினாலேயே,சொத்து விபரங்களை வெளியிட மறுத்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கோரிக்கையை நிராகரித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சித்தமையினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் தாக்கல்செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ட்ன் பெர்னான்டோ, தம்மை இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் அமைச்சர் என்ற வகையில் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து விபரங்களை தான் முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்க இன்று (23) உத்தரவிட்டார்.