களுகங்கை நீர் நிரப்பல் வெற்றிகரமாக பூர்த்தி!

களுகங்கை நீர் நிரப்பல் வெற்றிகரமாக பூர்த்தி!

by Staff Writer 23-07-2018 | 6:43 PM

மொரகஹகந்த - களு கங்கை திட்டத்தின் நீர் நிரப்பும் நிகழ்வும் களு கங்கை சுரங்கப் பாதையின் இரண்டாம் கட்டப்பணிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (23) நடைபெற்றது.

அத்தோடு, மொரகஹகந்த நீர்த்தேக்கம் குலசிங்க நீர்த்தேக்கமாக இன்று பெயரிடப்பட்டது. இலங்கையில் புதிய பல தொழிநுட்பங்களை அறிமுகம் செய்த கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்கவை கௌரவிக்கும் வகையில் அவருடைய பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. மொரகஹகந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 258 மெகாவோட் கொள்ளளவைக் கொண்ட மின்னுற்பத்தி கட்டமைப்பு ஜனாதிபதியினால் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. அதன்பின்னர் களு கங்கைக்கு நீர்நிரப்பும் நிகழ்வு நடைபெற்றது. மாத்தளை மாவட்டத்தில் நக்கிள்ஸ் மலைத்தொடரில் களுப்பான எனும் பிரதேசத்தில் ஆரம்பமாகும் களு கங்கையை லக்கல, பல்லேக பிரதேசத்தில் திசைதிருப்பி களு கங்கை நீர்ப்பாசனத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 14.5 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 248 இலட்சம் கனமீட்டராகும். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 5 நீர்ப்பாசனத் திட்டங்களை அமைப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், அதன் ஐந்தாவது திட்டமாகவே மொரகஹகந்த திட்டம் அமைந்துள்ளது. மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மூலம் அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், மாத்தளை, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட மக்களுக்கான குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் விநியோகிக்கப்படவுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த 95,000 ஹெக்டேயர் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சப்படவுள்ளது. இதனால் 1,50,000க்கும் அதிகமான குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர். மன்னம்பிட்டிய சோமாவதி பிரதேசங்கள் அடிக்கடி வௌ்ளத்தில் மூழ்குவதனால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் இந்தத் திட்டம் மூலம் அந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மொரகஹகந்த மற்றும் களு கங்கையை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் 96 கிலோமீட்டர் கொண்ட சுரங்கப் பாதையையும் ஜனாதிபதி இன்று பார்வையிட்டார். தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையாக இது பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது. 6,700 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த சுரங்கப்பாதையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் இன்று (23) ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதனை, அடுத்த 36 மாதங்களில் நிறைவுசெய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. தனது மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட மொரகஹகந்த திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லையென நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.