நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்!

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்!

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் நினைவுதினம்!

மூலம் அறிக்கை Fazlullah Mubarak எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 7:20 pm

யாழ். நல்லூரில் நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது மெய்ப்பாதுகாவலரின் ஒரு வருட நினைவஞ்சலி இன்று (22) நடைபெற்றது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலராக பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் சரத் பிரேமச்சந்திரவின் ஒரு வருட நினைவஞ்சலியில் நீதிபதி மா. இளஞ்செழியனும் கலந்துகொண்டிருந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிற்குசென்ற இளஞ்செழியன் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சரத் பிறேமசந்திரவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர், சரத் பிரேமச்சந்திரவின் சமாதிக்கு சென்ற நீதிபதி, அங்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது பாடசாலையின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து சரத் பிரேமச்சந்திரவின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா பெறுமதியிலான வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.

குறித்த வீடு இந்த மாதம் சரத் பிரேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் வீடு கையளிக்கப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 22 ஆம் திகதி நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பயணித்த வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறித்தெடுத்த ஒருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

15 ஆண்டுகளாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய சரத் பிரேமச்சந்திர என்ற 51 வயதான பொலிஸ் சார்ஜன் சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்