கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2018 | 6:44 am

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் வர்த்தத்துடன் தொடர்புடைய கைதிகளின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகளின் 3,000க்கும் அதிக தொலைபேசி உரையாடல் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவற்றில் சர்வதேச நாடுகளுக்கான தொடர்பாடலும் அடங்குகின்றன. இந்தியா, டுபாய், நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுடன், கைதிகள் தொடர்புகளைப் பேணியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காலி, வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளே இவ்வாறு சர்வதேச நாடுகளிலுள்ள குற்றவாளிகளுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர்.

குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் விசாரணைகளை முன்னெடுப்பதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தடுத்துவைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோருக்கு உதவிய சிறைச்சாலை பாதுகாவலர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான 6 சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் பணிபுரியும் அதிகாரிகளே இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையாக காலப்பகுதிக்குள், இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 சிறைச்சாலை பாதுகாவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்