தென் ஆபிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை முன்னிலை

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை முன்னிலை

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை முன்னிலை

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2018 | 9:48 pm

Colombo (News 1st) தென் ஆபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கைவசம் 7 விக்கெட்கள் இருக்க, 365 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை 338 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலளித்தாடிய தென் ஆபிரிக்கா 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 9 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்களுடன் இலங்கை முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இறுதி விக்கெட்டாக ரங்கன ஹேரத் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இது இந்த இன்னிங்ஸில் கேஷவ் மஹாராஜ் வீழ்த்திய 9 ஆவது விக்கெட்டாகும்.

இதன் மூலம் 61 வருடங்களின் பின்னர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தென் ஆபிரிக்கா சார்பாக 9 விக்கெட்களை வீழ்த்திய வீரராக கேஷவ் மஹாராஜ் வரலாற்றில் பதிவானார்.

பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 15 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.

அணித்தலைவர் பெப் டு பிலெசிஸ் 48 ஓட்டங்களையும், குவின்டன் டி கொக் 32 ஓட்டங்களையும் பெற்று அணி 100 ஓட்டங்களைக் கடக்க வழிவகுத்தனர்.

7 வீரர்கள் 10 க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தென் ஆபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் 124 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.

அகில தனஞ்சய 5 விக்கெட்களையும், டில்ருவன் பெரேரா 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

214 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க 61 ஓட்டங்களைப் பெற்றார்.

திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்