இரத பவனி கொழும்பை வந்தடைந்தது:  நாளை ஆடிவேல் விழா

இரத பவனி கொழும்பை வந்தடைந்தது: நாளை ஆடிவேல் விழா

இரத பவனி கொழும்பை வந்தடைந்தது: நாளை ஆடிவேல் விழா

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2018 | 9:34 pm

Colombo (News 1st) மூன்றாம் நாள் ஆடிவேல் சக்திவேல் இரத பவனி ஹட்டன் – கொட்டகலை – டிரேட்டன் தோட்ட சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இலங்கை திருநாட்டின் பாரம்பரிய விழாவான ஆடிவேல் விழாவை நாடு முழுவதும் வாழும் பக்தர்களை ஒன்றிணைத்து கொண்டாடும் நோக்கில், ஆடிவேல் சக்திவேல் விழா இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

MTV/MBC ஊடக வலையமைப்பு, நியூஸ்ஃபெஸ்ட்டுடன் இணைந்து நடத்தும் இந்த விழாவின் மூன்றாம் நாள் பவனி இன்று கொட்டகலை – டிரேட்டன் தோட்ட சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜைகளுடன் ஆரம்பமானது.

ஞானாசக்தியின் சொரூபமான வேல் பெருமானை பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட திருவேலுக்கு கொட்டகலை நகரிலுள்ள சித்தி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து ஹட்டன் நகரை வந்தடைந்த வேல் பெருமானுக்கு, மாணிக்க விநாயகர் ஆலயத்திலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆடிவேல் சக்திவேல் பவனி, வட்டவளை, ரொசல்ல, கினிகத்ஹேன, யட்டியந்தோட்டை, அவிசாவளை நகரங்களின் ஊடாக இன்று மாலை தலைநகரை வந்தடைந்தது.

பெருந்திரளான பக்தர்களுக்கு வேல் பெருமானை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

நாளைய தினம் காலை ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் இருந்து திரு வீதி உலாவாக வேல் பவனி கொழும்பு ப்ரேப்ரூக் பிளேசிலுள்ள கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகத்தை வந்தடையவுள்ளது.

இதன்போது, வேல் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், பல்வேறு கலை அம்சங்களும் ஆடிவேல் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

நாளைய நாள் ஆடிவேல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு, கந்தபுராணம் போற்றும் கதிர்காமக்கந்தன் ஆலயத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி சென்றடையவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்