32 கிலோமீட்டர் நடந்து வேலைக்கு வந்த இளைஞருக்கு காரைப் பரிசளித்த முதலாளி

32 கிலோமீட்டர் நடந்து வேலைக்கு வந்த இளைஞருக்கு காரைப் பரிசளித்த முதலாளி

32 கிலோமீட்டர் நடந்து வேலைக்கு வந்த இளைஞருக்கு காரைப் பரிசளித்த முதலாளி

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2018 | 4:11 pm

பணிக்குச் சேர்ந்த முதல் நாளில் 32 கிலோமீட்டர் நடந்து வேலைத்தளத்திற்கு வந்த இளைஞரின் கதையைக் கேட்ட முதலாளி, கார் ஒன்றைப் பரிசளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாம் நகர் அருகே உள்ள பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22).

கல்லூரியில் படித்துவரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது.

அந்த நிறுவனத்திற்கு அவர் செல்ல வேண்டும் என்றால் 32 கி.மீ. தொலைவைக் கடக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட கத்தரீனா புயலின் காரணமாக இளைஞரின் வீடு தரைமட்டமாகியுள்ளது.

இதனால், வால்டர் புதிய வீட்டில் தன் தாயுடன் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் வேலையும் கிடைத்ததால், முதல்நாள் பணிக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் நடந்து சென்றால் 32 கிலோமீட்டரை காலையில் அடைந்துவிடலாம் என நடக்கத் தொடங்கினார்.

அதிகாலை நேரத்தில் வால்டர் தனியாக நடந்து சென்றதைக் கவனித்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அழைத்து விசாரித்துள்ளனர். அவர் தன் நிலையைக் கூற, அவர் மீது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்த பொலிஸார், தற்போதைக்கு இங்கிருக்கும் தேவாலயத்தில் தூங்கு எனக் கூறித் தங்கவைத்துள்ளனர்.

அதன்பின் காலையில் பொலிஸ் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றபோது, தங்களின் தோழியான லேமே என்பவர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளனர். அப் பெண் பிரிமிங்ஹாம் நகருக்குத் தினந்தோறும் பணிக்குச் சென்றுவருவதால், அவரின் காரில் பொலிஸார் இளைஞரை அனுப்பிவைத்துள்ளனர்.

அப்போது, அந்த பெண் வால்டரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்து போய் அந்த நிறுவனத்தின் முதலாளியும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் கூறி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நிறுவனத்தின் முதலாளி, தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத வால்டர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் வடித்துள்ளார். இதையும் லேமே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, பலரும் நிறுவனத்தின் முதலாளி மற்றும் வால்டருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்