அர்ஜூன், கசுன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 19-07-2018 | 5:53 PM
Colombo (News 1st)  மத்திய வங்கி முறிகள் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பாலிசேன ஆகியோர் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் தங்கியுள்ள அறை சோதனைக்குட்படுத்தப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 சிம் அட்டைகள் தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கையை பரிசீலித்த போது, பல்வேறு உள்ளக விடயங்கள் தெரியவந்ததாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்ரியா ஜயசுந்தர நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பிலான தகவல்கள் அவற்றின் மூலம் தெரியவந்ததாகத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இது தொடர்பில் எதிர்காலத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து மேலதிக விடயங்களை மன்றின் கவனத்திற்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் முதன்மை விநியோகஸ்தராக செயற்பட்ட பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் மத்திய வங்கி முறிகள் ஏலத்தின் போது இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட நிதி சட்டவரையறைகள் மற்றும் மத்திய வைப்பக முறையைக் கையாளாமல், சட்டவிரோதமாக நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளமையினால் நிதிச்சட்டத்தின் சரத்துகள் மீறப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார். தமது தரப்பினர் இன்று காலை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நேரம் முதல் வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை தண்ணீரோ உணவோ வழங்கப்படாமையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக இன்றைய வழக்கு விசாரணை நிறைவில் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளை அழைத்த நீதவான், உணவு மற்றும் குடிநீர் சாதாரண மனிதர்களை போன்று சந்தேகநபர்களினதும் அடிப்படை தேவை என்பதனால் அதனை வழங்காமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளை வன்மையாகக் கண்டித்தார்.