இலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை

இலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை

இலங்கை அரசின் நிதியில் சுகபோகம் அனுபவித்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை இழக்கும் நிலை

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2018 | 9:32 pm

Colombo (News 1st)  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசின் 2 கோடி ரூபாவுக்கும் அதிக செலவில் சுகபோக விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சபை அமர்வுகளில் கலந்துகொள்ள 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நீண்டகால பாராளுமன்றத்தடை விதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நபர் இவர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2013 ஆம் ஆண்டில் தமது குடும்பத்தினருடன் சுகபோக விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்தமை தொடர்பிலேயே Ian Paisley எனப்படும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் DUP கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Ian Paisley, 2013 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் செலவில் தமது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துள்ளதாக டெலிகிராம் பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த பாராளுமன்ற உறுப்பினர், இலங்கையில் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனினால் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் எனவும் தெரிய வருகின்றது.

Ian Paisley, பணம் பெற்றுக்கொண்டு அழுத்தம் விடுத்துள்ளதாகவும் அதன் மூலம் அவர் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தின் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அவருக்கு வழங்கிய வரவேற்பு, இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு அழுத்தம் விடுக்க காரணமாக அமைந்ததாக ஏனைய தரப்பினர் நினைப்பதில் நியாயம் இருப்பதாக ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் கெனரின் ஸ்டோன்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அக்குரனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய மொஹமட் அனிபா மொஹமட் நியாஸுற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் 05 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றை நடத்திச் செல்வதற்கு அக்குரனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு 50,000 ரூபா பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

50,000 ரூபா பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், சீனாவிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட , மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் ஏனைய கொடுக்கல் வாங்கலூடாக பில்லியன் கணக்கில் மக்களின் பணத்தைத் திருடியவர்களுக்கு என்ன நேரும்?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்