மட்டக்களப்பில் கடலட்டை பிடிக்கும் வௌிநாட்டவர்

வௌிநாட்டு மீனவர்கள் மட்டக்களப்பில் கடலட்டை பிடிப்பதாகக் குற்றச்சாட்டு

by Bella Dalima 17-07-2018 | 8:18 PM
Colombo (News 1st) வௌி நாடுகளிலும் வௌி மாவட்டங்களிலும் இருந்து வரும் மீனவர்கள் மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திடம் மீனவர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். மட்டக்களப்பு - நீலாமுனை, நாவலடி மற்றும் சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்ஷாந்த் டி குரூஸிடம் மகஜரைக் கையளித்தனர். இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளால் மீனினங்கள் அழிவடைவதாகவும் மீனவர்கள் கவலை வெளியிட்டனர். இதேவேளை, வௌிநாடுகளுடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
இந்து மற்றும் தெற்காசிய வலயத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும் தந்திரோபாயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக சீனா தெரிவிக்கின்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் காரணமாக நாமும் தற்போது அதில் சிக்கியுள்ளோம். சீனாவுடன் நாம் செய்து கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, சீனாவின் வர்த்தகக் கப்பல்கள் இங்கு வந்தாலும், துறைமுகத்தின் பாதுகாப்பு எமது பாதுகாப்புப் பிரிவின் கீழே இருக்கிறது. அத்துடன், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவை சஞ்சரிக்கின்றனவா என்பது தொடர்பில் ஆராயுமாறு எமது கடற்படையினருக்கு கூறியுள்ளோம். கடற்பாதுகாப்பிற்கு பல கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எமக்கு பொறுப்புக்கூற முடியும். அதனை விடுத்து நாம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கடற்படைத் தலைமை மையமாகப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.
இலங்கை கடற்பரப்பில் வௌிநாடுகளின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதமர் இவ்வாறு கூறினாலும் கொரியா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களும் மட்டக்களப்பில் கடலட்டை பிடிப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். வௌிநாட்டவர்கள் இங்கு கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளதாக மீனவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு குறித்து கடற்படையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. இந்த விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என கடற்படை ஊடகப்பேச்சாளர், கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்