பாதுகாவலர்களாக பாதாள உலகக் கோஷ்டியினர்?

பாதாள உலகக்கோஷ்டியினரை மெய்ப்பாதுகாவலர்களாக நியமித்துள்ள அமைச்சர் யார்?

by Bella Dalima 17-07-2018 | 8:46 PM
Colombo (News 1st) பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களின் மெய்ப் பாதுகாவலர்களாக செயற்படுகின்றனர் என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற்றது. வடக்கின் பல பகுதிகளில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் கொலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலீன் பண்டார, அவை பயங்கரவாதக் குழுக்கள் இல்லை எனவும் தென்னிந்தியத் திரைப்படங்களைப் பார்த்து சிலர் ஆயுதங்களை ஏந்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். அவர்களை விஞ்சும் வகையில் ஆபத்தான ஆயுதங்களை ஏந்தியவர்கள் தெற்கில் உள்ளதாகவும் ஆயுதம் ஏந்திய குழுவினரைக் காண்பித்து வடக்கில் புலிகள் உருவாகுகின்றனர் எனும் பீதியை தெற்கில் ஏற்படுத்துவது தவறு எனவும் நலீன் பண்டார சுட்டிக்காட்டினார். பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்த ஐவர், அமைச்சர் ஒருவரின் மெய்ப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்றைய பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குறிப்பிட்டார். இந்த செய்தி உண்மையாக இருப்பின், குறித்த பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதன்போது, பாதாள உலகக் கோஷ்டியினரை உருவாக்கியது யார் என்பது நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும் எனவும் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு, பாராளுமன்றத்திற்கு அறிவிப்போம் எனவும் பிரதி அமைச்சர் நலீன் பண்டார குறிப்பிட்டார். இந்த செய்தி லங்கா தீப பத்திரிகைக்காரர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.