விசேட மேல் நீதிமன்றின் முதலாவது வழக்கு இன்று

விசேட மேல் நீதிமன்றின் முதலாவது வழக்கு இன்று

by Staff Writer 16-07-2018 | 11:59 AM
Colombo (News 1st) அரச பணம் தவறாக கையாளப்பட்டமை, இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் செயலணித் தலைவர் காமினி செனரத் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் பியதாஸ குடாபால​கே ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நிதியை முதலீட்டுத் திட்டமாக ஹயட் ஹோட்டல் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டதன் மூலம் நிதி மோசடி இடம்பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தகர்கள், முகவர்கள் அரச பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமிற்கு, மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் ஜானகீ ராஜரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.