சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவிற்கு தடை

சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்கவிற்கு போட்டித் தடை

by Staff Writer 16-07-2018 | 7:03 PM
இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகிய மூவருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கு மேலதிகமாக 4 சர்வதேச ஒருநாள் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்துள்ள தினேஷ் சந்திமால், சர்வதேச ஒருநாள் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளார். அண்மையில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு விஜயம் செய்த இலங்கை அணி 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் 2 மணித்தியாலங்கள் தடைப்பட காரணமாக இருந்தது. இதற்காக அணித்தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுநர் சந்திக ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட் போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், டெஸ்டைத் தவிர 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தடையையும் குறித்த மூவருக்கும் விதித்ததாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைய தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் தினேஷ் சந்திமால் இழந்துள்ளார். இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.