காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

காடுகளின் அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது - ஜனாதிபதி

by Staff Writer 16-07-2018 | 8:22 PM
தற்போது காணப்படும் காடுகளின் அடர்த்தியை 32 வீதம் வரை அதிகரிப்பதற்காக இலங்கை அரசு அரப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு மற்றும் வன பாதுகாப்பு சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ரோமில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமையகத்தில் இந்த மாநாடு இன்று ஆரம்பமானது. மனிதர்களுக்குத் தேவையான சமூக பொருளாதார அனுகூலங்கள் வனங்களில் உள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான விரிவான ​பேச்சுவார்த்தை மற்றும் உறுதியான தீர்மானங்களை எட்டுவதற்கான சிறந்த தளம் உலக வன பாதுகாப்பு சபை என சுட்டிக்காட்டியுள்ளார். உலக வனப்பாதுகாப்பு சபையின் எதிர்கால நிகழ்ச்சிநிரலிலுள்ள சவால்மிக்க திட்டங்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட ​வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்த 50 வீதத்திற்கும் மேற்பட்ட காடுகள் தற்போது 29 வீதமாக குறைவடைந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சனத்தொகை பெருக்கமே இதற்கு காரணமென தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பாரிய சூழலியல் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. காடுகளை பாதுகாப்பது அரசின் பிரதான பொறுப்பென்பதுடன் 2020 ஆம் ஆண்டாகும் போது 5 மில்லியனுக்கும் அதிக மரங்களை நாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கூறினார்.