எதிர்க்கட்சி பதவியை கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

by Staff Writer 16-07-2018 | 7:35 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் 92 பேரில் 70பேர் தமது கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ், அந்த 70 பேரும் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளதாகத் தெரிவித்தார். ஆர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளமுடியாது என குறித்த 70 பேரும் தெரிவிக்கவுள்ளதோடு, அந்தப் பதவியை அவர் வகிப்பதில் இந்த உறுப்பினர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும் கூறவுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆர்.சம்பந்தன் பெரியளவில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர் உண்மையில் அரசாங்கத்தின் பங்குதாரர். இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிக்காத உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவரே ஆர்.சம்பந்தனாவார். 3 வருடங்கள் தொடர்ச்சியாக எந்தவொரு திருத்தத்தையும் முன்வைக்காது, வரவு செலவுத் திட்டத்திற்கு கையுயர்த்தி ஒத்துழைப்பு வழங்கினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேர​ணை முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பிரதமரைப் பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இரா.சம்பந்தனும் இயலுமையான அனைத்தையும் செய்தனர். இந்த 72 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கோரிக்கையை கருத்திற்கொண்டு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானமெடுக்க வேண்டும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.