போதைப்பொருள் விற்பனையை ஒடுக்குவதற்கு விசேட படையணி

போதைப்பொருள் வியாபாரத்தை ஒடுக்குவதற்காக விசேட படையணி

by Staff Writer 15-07-2018 | 9:55 AM
Colombo (News 1st) போதைப்பொருள் வியாபாரத்தை ஒடுக்குவதற்காக விசேட படையணியை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்தி, போதைப்பொருள் வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரின் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவு ஈ.ஆர்.டி எனும் பெயரில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 200 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ ஹெரோயினின் பெறுமதி தற்போது 1 கோடியே 20 இலட்சம் ரூபாவாக காணப்படுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார். ​இந்தநிலையில், ஹெரோயின், கொக்கேய்ன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் இதுவரை 17,472 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, புத்தளம், சிலாபம், யாழ்ப்பாணம் மற்றும் தென் பிராந்திய கடற்பகுதிகளிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேநேரம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலிருந்தே அதிகமாக போதைப்பொருட்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.