பரீட்சை நிலையங்களிற்கு மேலதிக பொறுப்பதிகாரி

பரீட்சை நிலையங்களிற்கு மேலதிக பொறுப்பதிகாரி

by Staff Writer 15-07-2018 | 5:54 PM

பரீட்சை முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலைய பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிணங்க குறித்த மேலதிக நிலைய பொறுப்பதிகாரியூடாக பரீட்சை கண்காணிப்புகள் மேற்பார்வை செய்யப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார். இதற்கு ​மேலதிகமாக பரீட்சை மத்திய நிலையங்களுக்குக் கொண்டுவரப்படும் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது. இம்முறை உயர்தரப்பரீட்சையில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 21,469 பேர் தோற்றவுள்ளனர். 2,267 பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் 311 ஒருங்கிணைப்பு மையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் சிங்கள மற்றும் தமிழ்மொழி மூலம் 3,55,326 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.