சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய பரபரப்பான செய்திகள்

by Chandrasekaram Chandravadani 15-07-2018 | 7:41 AM
Colombo (News 1st) உள்ளூர் செய்திகள் 01. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை நாளை (15) நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. 002. ஆறாவது உலக வன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு மற்றும் வன பாதுகாப்புச் சபையின் 24 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோம் நோக்கி பயணமானார். 03. பசும்பால் விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் குறைவாகக் காணப்படுவதால், பசும்பாலுக்கான நிர்ணய விலையை விதிக்குமாறு பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 04. தான் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களையும் அது சார் ஆவணங்களையும் உடனடியாக தன்னிடம் மீண்டும் வழங்குமாறு கோரி, வட மாகாண சபை உறுப்பினர் பா. டெனீஸ்வரன், வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு விலாசமிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. 05. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) தொடக்கம் சிறைச்சாலையில் விசேட பிரிவில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 06. மொனராகலை - குடா ஓயா, கெவிந்துபுர ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். குடாஓயா - ஊவ குடாஓயா பகுதியில் 52 வயதான ஒருவரும் மொனராகலை - கெவிந்துபுர பகுதியில் 38 வயதான ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தானில் தேர்தல் பேரணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளதுடன், 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இருவேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளின்போது, பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். 02. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் மின்னஞ்சல்களை ஊடுருவியதாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 352 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 73 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 02. உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பெல்ஜியம் அணி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாமிடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.