உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டி இன்று

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: இறுதிப் போட்டி இன்று

by Staff Writer 15-07-2018 | 8:30 AM
உலக மக்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரின் இறுதிப் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 14 ஆம் திகதி ரஷ்யாவில் ஆரம்பமான 21 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் 32 அணிகள் பங்கேற்றன. முன்னாள் சம்பியன்களான பிரேஸில், ஆர்ஜென்டினா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறமுடியாமல் வெளியேறியதோடு, நடப்பு சம்பியனான ஜேர்மனி அணி முதல் சுற்றுடன் தொடலிருந்து வெளியேறியமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும், தொடரின் ஆரம்பத்திலிருந்து திறமையான ஆற்றலை வெளிப்படுத்திய குரோஷிய அணி, வரலாற்றில் முதல்தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளமை சிறப்பம்சமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், அரையிறுதிப் போட்டியில் பெல்ஜிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற பிரான்ஸ் அணி இன்றைய போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகக்கிண்ணத்தை வென்று தமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே தாம் உள்ளிட்ட தமது அணி வீரர்களின் ஒரே எதிர்ப்பார்ப்பு என குரோஷிய அணித்தலைவர் Luka Modrić நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குரொஷியா 4ஆம் இடத்தைப் பிடித்தது. எவ்வாறாயினும், பிரேஸில் அணியை வீழ்த்தி 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி உலக சம்பியனாக மகுடம் சூடியது. இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றியீட்டும் பட்சத்தில் அவ்வணியால் 2ஆவது தடவையாகவும் சம்பியனாக மகுடம் சூட முடியும் என்கின்ற அதேநேரம், குரொஷியா வெற்றியீட்டினால், அவ்வணி வரலாற்றில் முதல்தடவையாக சம்பியனான பெருமையைப் பெறும். பிரான்ஸ் - குரோஷிய அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி, மொஸ்கோவின் லுஸ்ஹினி மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.