நவாஸ் ஷெரீஃபும் மகள் மரியமும் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் மகள் மரியமும் கைது

by Bella Dalima 14-07-2018 | 6:50 AM
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டனர். இவர்கள் லண்டனில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு திரும்பிய போது கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் எதிர்வரும் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நவாஸ் கைதாகியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபும் (68), அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்ததாக பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்காக நவாஸ் லண்டனில் தங்கியிருந்தார். இந்நிலையில், லண்டனில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓர் ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், நவாஸ் உள்ளிட்டோர் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாய்நாடு திரும்புவதற்கு நவாஸும், மரியமும் முடிவு செய்தனர். அதன்படி, லண்டனில் இருந்து அபுதாபி வழியாக இருவரும் நேற்று இரவு 9.15 மணியளவில் லாகூர் விமான நிலையத்திற்கு சென்றனர். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நேரத்தை விட சுமார் 3 மணி நேரம் தாமதமாக அவர்களது விமானம் லாகூர் வந்தடைந்தது. விமானத்தில் இருந்து இறங்கிய உடன், அங்கு தயாராக இருந்த ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவர்கள் சரணடைந்தனர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இருவரது கடவுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், ஷெரீஃபும், மரியமும் சிறப்பு விமானம் மூலம் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதுதொடர்பான தகவல் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பஷீர் பிறப்பித்தார்.   இதனையடுத்து, இருவரும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.