பாகிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலி

பாகிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலி: ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு

by Bella Dalima 14-07-2018 | 6:15 AM
பாகிஸ்தானில் தேர்தல் பேரணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலியாகியுள்ளதுடன், 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளின்போது பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். பலூசிஸ்தான் மாகாணம் - மஸ்துங் பகுதியைச் சேர்ந்த பலூசிஸ்தான் அவாமி கட்சித் தலைவர் சிராஜ் ரைஸானியை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. பலூசிஸ்தான் முன்னாள் முதல்வரான நவாப் அஸ்லாம் ரைஸானியின் சகோதரரான சிராஜ் இந்த தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கட்சிப் பேரணி என்பதால், பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டுத் தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. எனினும், தற்கொலைத் தாக்குதல் மூலம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸாரும் புலானாய்வு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.