பசும்பாலுக்கு நிர்ணயவிலை விதிக்குமாறு கோரிக்கை

பசும்பாலுக்கு நிர்ணயவிலை விதிக்குமாறு பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை

by Bella Dalima 14-07-2018 | 7:01 PM
Colombo (News 1st)  பசும்பால் விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானம் குறைவாகக் காணப்படுவதால் பசும்பாலுக்கான நிர்ணய விலையை விதிக்குமாறு பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கால்நடை வளர்ப்பினை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள பலர் நாட்டில் உள்ளனர். தயிர், யோகட், நெய், பால்மா போன்றவற்றிற்கான மூலப்பொருளாக பசும்பால் காணப்படுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு , பொலன்னறுவை, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பசும்பால் உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருந்த போதிலும், பல்வேறு போராட்டத்திற்கு மத்தியிலேயே தாம் பால் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பாற்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் பகுதியில் ஒரு லீட்டர் பால் 60 தொடக்கம் 65 ரூபா வரை பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், குறித்த பகுதியில் உள்ள கடைகளுக்கு ஒரு லீட்டர் பாலை 90 ரூபாவிற்கு விற்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை மற்றும் கரைச்சி போன்ற பகுதிகளில் 65 தொடக்கம் 75 ரூபா வரை பால் விற்பனை செய்து வருகின்றனர். எனினும், பால் கொள்வனவு செய்யும் நிறுவனங்கள் உரிய முறையில் தமது கொடுப்பனவுகளை வழங்குவது இல்லை என பாற்பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர். மட்டக்களப்பு - செங்கலடியில் 60 தொடக்கம் 70 ரூபா வரை பசும்பாலை விற்பனை செய்வதாகவும் தமக்கான வருமானம் போதாமல் உள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை வௌியிட்டனர். இதே​வேளை, மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லீட்டர் பாலை 40 தொடக்கம் 55 ரூபா வரை நிறுவனங்கள் கொள்வனவு செய்து வருகின்றன. பராமரிப்பு செலவு அதிகரித்து காணப்படும் நிலையில், நிறுவனங்கள் வழங்கும் நிதி போதாமல் உள்ளதாக பாற்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மாத்திரமே கொள்வனவு செய்யப்படும் பாலுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் ஒரு லீட்டர் பால் 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. நாடு பூராகவும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலைகளில் பசும்பால் கொள்வனவு செய்யப்படுகின்றமை கண்கூடு. இந்நிலையில், பால் கொள்வனவின்போது நிர்ணயவிலை ஒன்றைப் பேண வேண்டும் என பாற்பண்ணையாளர்கள் விரும்புகின்றனர்.