இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் - 03ஆவது நாள்

இலங்கை - தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் - 3ஆவது நாள்!

by Staff Writer 14-07-2018 | 10:08 AM
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளாட்டம் இன்று நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 262 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 287 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணியால் 126 ஓட்டங்களையே பெறமுடிந்ததுடன் 2ஆம் இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2ஆம் நாளான நேற்று ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ஓட்டங்களுடன் தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் பெப் டு பிலெசிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார். தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் 126 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 161 ஓட்டங்களால் முன்னிலையுடன் 2ஆம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தது. எனினும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணரத்ன 60 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஏஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களுடனும் ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். போட்டியின் பின்னர் இலங்கை அணியின் தில்ருவன் பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். மூன்று நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், மேலும் ஓட்டங்களை பெறுவதே தமது இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.