by Staff Writer 13-07-2018 | 4:18 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களுக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் 16 பேரும் மீளவும் இதே குற்றச்செயலில் ஈடுபடுவார்களாயின், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
16 குற்றவாளிகளையும் உடனடியாக நாடு கடத்துவதற்கு அவர்களை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய சட்டத்தின் கீழ், படகுகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடுவதா அல்லது அவற்றை அரசுடைமையாக்குவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மன்று தெரிவித்துள்ளது.