SL Vs SA முதல் டெஸ்ட்: இலங்கை முன்னிலை

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை முன்னிலை

by Bella Dalima 13-07-2018 | 7:34 PM
Colombo (News 1st)  தென் ஆபிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 262 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 287 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணியால் 126 ஓட்டங்களையே பெற முடிந்ததுடன், இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்களுடன் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இலங்கை வீரர்களின் அபார பந்து வீச்சில் தென் ஆபிரிக்கா அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் பெப் டு பிலெசிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார். தென் ஆபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் 126 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 4 விக்கெட்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 161 ஓட்டங்களால் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தது. எனினும், ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன 60 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பந்து வீச்சில் கேஷவ் மஹாராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.