மரண தண்டனை கைதிகள் தொடர்பில் ஆய்வு

மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய கைதிகள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆய்வு

by Bella Dalima 12-07-2018 | 9:03 PM
Colombo (News 1st)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (11) தெரிவித்த கருத்தின் பின்னர், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து தற்போது அதிகம் பேசப்படுகின்றது. போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னரும், பாரியளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் தாம் ஆராய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரம் அவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 17 பேர் தற்போது உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரமே மரண தண்டனையை நிறைவேற்றும் வசதிகள் காணப்படுவதாகவும் அலுக்கோசு பதவிக்கு விண்ணப்பங்களைக் கோர எதிர்பார்த்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இதேவேளை, அண்மையில் 103 கிலோகிராமுக்கு அதிக ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியொருவர் அதனுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதியாகவுள்ள சூசை எனப்படும் தர்மராஜா சுசேந்திரன் என்பவர் மொஹமட் மாஹின் என்பவருடன் தொடர்ந்தும் தொலைபேசியூடாக தொடர்பைப் பேணியுள்ளார். இலங்கைக்கு ஹெரோயின் கொண்டு வருவது, அதற்கு திட்டமிடுவது சூசை என விசாரணைகளூடாக தெரியவந்துள்ளது
என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எதற்கும் அஞ்சாது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பாரிய அரசியல் பலமுள்ளவர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மரண தண்டனை விதிப்பது தொடர்பில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்ற போதும், அதனை முன்னெடுப்பது சரியானது என ஜனாதிபதி கருதுவாராயின், அதற்கு எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார்.