தாய் பிரதமர் விஜயம்: வர்த்தகம் தொடர்பில் பேச்சு

தாய்லாந்து பிரதமர் விஜயம்: பொருளாதார, வர்த்தக, முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்

by Bella Dalima 12-07-2018 | 9:38 PM
Colombo (News 1st)  தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று தாய்லாந்து பிரதமர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். தாய்லாந்து பிரதமரை வரவேற்கும் அரச நிகழ்வு இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. தாய்லாந்து பிரதமரின் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவுள்ளன. தாய்லாந்து பிரதமர் விஜயத்தின் பிரதான நோக்கம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நாளை (13) காலை இடம்பெறவுள்ளது. இதன்போது, பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத்துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன. மேலும், இந்த விஜயத்தின் போது தாய்லாந்து பிரதமர் கண்டி ஶ்ரீ தலதா மாளிகைக்கு செல்லவுள்ளதுடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.