சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்கவிற்கு போட்டிதடை

கிரிக்கெட் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் குருசிங்கவிற்கு போட்டித் தடை

by Staff Writer 12-07-2018 | 8:31 AM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால், தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் 2 டெஸ்ட் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின்போது, கிரிக்கெட் ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர்களின் செயற்பாட்டினால், போட்டியை ஆரம்பிப்பதில் சுமார் 2 மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினேஸ் சந்திமால், சந்திக அத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோரிடம் ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை அவர்களுக்கு 2 டெஸ்ட் போட்டிகளுக்குத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை விதிப்பு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது. அதற்கமைய, 2 போட்டிகளைக் கொண்ட இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டிகளிலிருந்து அவர்கள் விலக்கப்படவுள்ளனர்.