கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் திருத்தம் 

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கடற்படையினரின் வேன் திருத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

by Staff Writer 12-07-2018 | 4:36 PM
Colombo (News 1st)  2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கடற்படையினருக்கு சொந்தமான வேன் தற்போது திருத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். எனினும், குறித்த வேன் திருத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை கடற்படையினர் இதுவரையில் வழங்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த விடயங்கள் குறித்து மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தின் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, இதுவரையில் நீதிமன்றத்தில் ஆஜராகாதுள்ள கடற்படைத் தளபதி லெப்டினன்ட் கமாண்டர் பிரசாத் ​ஹெட்டியாராச்சி மற்றும் அவரின் தலைமையின் கீழ் செயற்பட்ட படையினர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டு அது தொடர்பான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவின் இரண்டு உறுப்பினர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.