போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகளே உதவுகின்றனர்: சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்
by Bella Dalima 12-07-2018 | 8:35 PM
Colombo (News 1st) சிறைச்சாலை அதிகாரிகளே போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சிறைக்குள் இருந்து செயற்படும் சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையதிகாரி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
கைதிகள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்பொன்றிற்கு 2000 ரூபா வரை அறவிடப்படுவதாகவும் இதன் மூலம் நாளொன்றுக்கு 25,000 முதல் 30,000 வரை சிலருக்கு கிடைப்பதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு பல அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே பொறுப்புக்கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொலைபேசி உரையாடலைத் தடுப்பதற்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த உபகரணம் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதுடன் அது கண்காணிக்கப்படவும் இல்லை. அந்த கருவியை வேறு திசைக்குத் திருப்பி வேறு தொலைபேசி உரையாடல்களுக்கு தடையேற்படுத்தியுள்ளனர். தடுக்கப்பட வேண்டிய தொலைபேசி உரையாடல்கள் இதனூடாக தடுக்கப்படவில்லை.
என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.